கைவினை கலைஞர்களுக்கு லாபமின்றி மரங்கள் வழங்கப்படும் - 6 இடங்களில் ‘கிராப்ட் வுட் வங்கிகள்’ அமைக்க பவன் கல்யாண் உத்தரவு
அமராவதி , 11 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆந்திர மாநிலத்தில் பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு தேவையான தரமான மரங்களை லாப நோக்கமின்றி வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக மாநிலத்தின் 6 முக்கிய இடங்களில் ‘கிராப்ட் வுட் வங்கிகள்’ அமைக்கப்பட உள்ளன. இதுதொடர
A


அமராவதி , 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆந்திர மாநிலத்தில் பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு தேவையான தரமான மரங்களை லாப நோக்கமின்றி வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்காக மாநிலத்தின் 6 முக்கிய இடங்களில் ‘கிராப்ட் வுட் வங்கிகள்’ அமைக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக துணை முதல்-மந்திரியும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பவன் கல்யாண், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கைவினை கலைஞர்களுக்கு தேவையான மரங்களை லாபம் எதுவும் இன்றி வழங்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மரங்களை சேகரித்தல், போக்குவரத்து செய்தல் மற்றும் சேமித்து வைப்பதற்கான உண்மையான செலவை மட்டும் கணக்கிட்டு, அதற்கேற்ப கைவினை கலைஞர்களிடம் இருந்து தொகையை வசூலிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

மரப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக கைவினை கலைஞர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இந்த மர வங்கிகள் உதவியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், மரப்பொருட்கள் விநியோகத்தில் இடைத்தரகர்களின் தலையீட்டை முற்றிலும் அகற்ற வேண்டும் என்று பவன் கல்யாண் வலியுறுத்தினார்.

இதன் மூலம் கைவினை கலைஞர்களின் உற்பத்தி செலவு குறைவதுடன், அவர்களின் வருமானமும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

6 இடங்களில் மர வங்கிகள்

கொண்டப்பள்ளி, ஏட்டிக்கொப்பாகா, செட்டிகுண்டா, மாதவமாலா, உதயகிரி மற்றும் பொப்பிலி ஆகிய 6 முக்கிய இடங்களில் கிராப்ட் வுட் வங்கிகள் அமைக்கப்பட உள்ளன.

கொண்டப்பள்ளி பொம்மைகள் தயாரிக்க தேவையான வெள்ளைப்பொன்னி மரம், ஏட்டிக்கொப்பாகா கைவினைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அங்குடு மரம், பொப்பிலி வீணைகள் தயாரிக்க தேவையான பலா மரம் மற்றும் ரோஸ்வுட் ஆகிய மரங்கள் இந்த வங்கிகள் மூலம் கைவினை கலைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இதுதவிர, ராஜமுந்திரியில் செயல்படும் மத்திய மர வங்கியில் மூங்கில், தேக்கு உள்ளிட்ட மரப்பொருட்களை இருப்பில் வைத்து கைவினை கலைஞர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அரிய மர வகைகள்

அரிதாக கிடைக்கும் மர வகைகளை கண்டறிந்து, அவற்றின் இருப்பு மற்றும் கிடைக்கும் பகுதிகளை வரைபடம் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று பவன் கல்யாண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அந்த அரிய மர வகைகளை வனத்துறை நர்சரிகளில் வளர்த்து, எதிர்காலத்தில் கைவினை கலைஞர்களுக்கு தேவையான மரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இடைத்தரகர்களை அகற்றி, கைவினை கலைஞர்களுக்கு தரமான மரப்பொருட்களை குறைந்த செலவில் நேரடியாக வழங்குவதன் மூலம் அவர்களின் உற்பத்தி செலவை குறைத்து, வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA