Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச)
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூரில் உயர் மின் அழுத்த மின்பாதை அமைக்கும் பணிக்காக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தேக்கு மற்றும் மாமரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
வடதொரசலூரில் உயர் மின் அழுத்த மின்பாதை அமைப்பதற்காக பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. தன் கண்முன்னே தான் வளர்த்த மரங்கள் வெட்டப்படுவதைத் தாங்க முடியாமல், பெண் விவசாயி செல்வி மரத்தை அணைத்துக்கொண்டு கதறி அழுத காட்சி நெஞ்சை உலுக்கியது.
வளர்ச்சிப் பணிகள் அவசியமானவை என்றாலும், அதற்காக தங்களது பல ஆண்டுகால உழைப்பில் வளர்த்த மரங்களை இழக்கும் விவசாயிகளின் வேதனையையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
வெட்டப்பட்ட மரங்களுக்கு உரிய மற்றும் நியாயமான இழப்பீட்டை விவசாயி செல்விக்கு தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக மீண்டும் பசுமையை உருவாக்கும் முயற்சியாக, WTL Foundation சார்பில் அம்பேத் கோபி ராவணன், விவசாயி செல்விக்கு மரக்கன்றுகளை வழங்கியதாகவும், அவரையே அந்த மரக்கன்றுகளை நட்டு வளர்க்கச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக புதிய மரங்கள் வளரட்டும். ஒரு மரத்தை இழந்த இடத்தில் பல மரங்கள் உருவாகட்டும்” என அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ