Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணைக்காக மனைவி மகாலட்சுமி மற்றும் வழக்கறிஞர்களுடன் காரில் வந்த பிரபல ரவுடி பாம் சரவணனை, ஐ.சி.எம்.ஆர். அருகே வைத்து சென்னை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
காவல்துறையினர் காரை நிறுத்தி பாம் சரவணனை இறக்கி அழைத்துச் சென்றதால், உடன் வந்த அவரது மனைவி மற்றும் வழக்கறிஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எதற்காக அவரை அழைத்துச் செல்கிறார்கள் என்பது தெரியாத நிலையில், அவரது மனைவி அவசர உதவி எண் 100-க்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் பாம் சரவணனை காரில் அழைத்துச் சென்றனர். அவரை அழைத்துச் சென்ற காவல்துறை வாகனத்தை சிலர் துரத்திச் சென்று வீடியோ எடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையில், பாம் சரவணனின் சகோதரர் தென்னரசு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஜெயசீலன் என்பவர் 2016ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பாம் சரவணன் குற்றவாளியாக உள்ள நிலையில், அந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்தபோது சென்னை காவல்துறையினர் அவரை கைது செய்தது தெரியவந்துள்ளது.
நீதிமன்ற வளாகம் அருகே பாம் சரவணன் மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P