Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் இணைந்து அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
மேலும் தடை செய்யப்பட்ட பொருளாக இருந்தாலும் அதனால் பழக்கப்பட்டவர்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதால் கடைக்காரர்கள் மறைமுகமாக அதனை விற்பனை செய்து வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தந்த மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து கடைகளில் ஆய்வு செய்து புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அதனை பறிமுதல் செய்து வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்த புகையிலைப் பொருட்களை பூமிக்குள் போட்டு அழிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தடைச் செய்யப்பட்ட பொருட்களை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு துறையினர் அதனை உடனடியாக அழித்து வருகின்றனர்.
அதன்படி, நீதிமன்றத்தின் உத்தரவின் படி, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை, சென்னை மாவட்ட காவல்துறையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 12.5 டன் எடை கொண்ட புகையிலை பொருட்களை சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி குழிதோண்டி புதைத்து அழித்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியபோது,
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து தொடர்ந்து அழித்துக் கொண்டே வருகிறோம். கடந்த முறை 5 டன் கொண்ட 50 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டது. தற்போது 1 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடிய கடைகளுக்கு முதலில் குறைந்தபட்சம் 15 நாட்கள் தண்டனையுடன் அபராதம் விதக்கப்படுகிறது. அதிகபட்சம் 6 மாத தண்டனையுடன் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 மாத காலமாக சில்லறை விற்பனை கடைகளில் இந்த பொருட்கள் எந்த கடைகளிலும் கிடைப்பதில்லை. ஆனால் சிலர் இருசக்கர வாகனங்கள் போன்றவை மூலம் விற்பனை செய்கின்றனர்.
அதையும் 3 மாதம் முதல் 6 மாதத்திற்குள் முழுவதுமாக தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மாலை நேரங்களில் தீவிரமாக சோதனை மேற்கொண்டு கண்காணித்து வருகிறோம். பெட்டிகடைகள், டீ கடைகள் போன்றவற்றில் விற்பனை செய்பவர்களை காவல்துறை உதவியுடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN