சென்னை காவல் துறையில் “ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு” தொடக்கம்
சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை பெருநகர காவல் துறையில் காவலர்கள் லஞ்சம் பெறுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் “ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு” புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக கூறி தொழிலதிபரை மிரட்டி ரூ.
காவல் துறை


சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை பெருநகர காவல் துறையில் காவலர்கள் லஞ்சம் பெறுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் “ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு” புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக கூறி தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் வரை பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் புஹாரி மற்றும் முன்னாள் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படையில் இடம்பெற்றிருந்த காவல்துறையினரிடமும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, காவல்துறையில் லஞ்சம் பெறுவது தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், இனிமேல் யாரும் லஞ்சம் பெறக்கூடாது என்றும் அவர் கடுமையாக எச்சரித்ததாக தெரிகிறது. காவல் நிலையத்தின் வளர்ச்சி அல்லது இதர தேவைகளுக்காக பொதுமக்களிடம் லஞ்சம் பெறக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை நேர்மையாகவும், லஞ்சம் பெறாமலும் பணியாற்றி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஒரு சிலரின் தவறான செயல்பாடுகளால் காவல்துறைக்கு ஏற்படும் களங்கத்தைத் தடுக்கும் வகையில் இந்த “ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு” தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் தங்களது பணிகளை மேற்கொள்வதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டால், அதுகுறித்த தகவல்களை 78717 23000 என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாகவோ அல்லது WhatsApp மூலமாகவோ தெரிவிக்கலாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், காவல்துறையினர் தங்களது பணிகளை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் யாரும் எந்த வகையிலும் லஞ்சம் வழங்க வேண்டாம் என சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam