Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (73). கடந்த 7-ம் தேதி இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், மூதாட்டியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையின் அடிப்படையில், காக்களூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மூதாட்டியை நகைக்காக திட்டமிட்டு கொலை செய்தாரா, கொலை நடந்த விதம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் பாலசுப்பிரமணியனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் செவ்வாப்பேட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam