பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் கொண்டு செல்ல 3 மாத தடை – வழக்குகள் தலைமை நீதிபதி பார்வைக்கு கொண்டு செல்ல உத்தரவு
சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமப் பொருட்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதி
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமப் பொருட்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பார்வைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கான கனிமப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மாநிலத்தின் உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு பிற மாநிலங்களுக்கு கருங்கல் உள்ளிட்ட கனிமப் பொருட்களை கொண்டு செல்வதற்கு 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து கனிமவளத்துறை இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின்படி கருங்கல், பாறாங்கல், உடைக்கப்பட்ட மற்றும் நொறுக்கப்பட்ட கற்கள், எம்-சாண்ட், மெட்டல் ஜல்லி, பாலாஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கனிமப் பொருட்களை தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உற்பத்தியாகும் கனிமப் பொருட்கள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுவதால், தமிழகத்துக்குள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வதாகவும், கட்டுமானத் துறையில் பாதிப்பு ஏற்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனிம வளங்களை அதிகளவில் வெட்டி எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத கனிமச் சுரங்கம் மற்றும் போக்குவரத்தை தடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கனிமவளத்துறை இயக்குநரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி குவாரி உரிமையாளர்கள், எம்-சாண்ட் உற்பத்தியாளர்கள் மற்றும் கனிமப் பொருட்கள் தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களில், பிற மாநிலங்களுக்கு கனிமப் பொருட்களை கொண்டு செல்வதை முழுமையாக தடை செய்யும் அதிகாரம் கனிமவளத்துறை இயக்குநருக்கு உள்ளதா, புதிதாக கொண்டுவரப்பட்ட விதிகளின் அடிப்படையில் இதுபோன்ற தடை உத்தரவை பிறப்பிக்க முடியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பார்வைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, கனிமவளத்துறை இயக்குநர் பிறப்பித்த 3 மாத தடை உத்தரவு சட்டப்படி செல்லுமா என்பது குறித்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அடுத்தகட்டமாக விசாரணை நடத்த உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam