Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
காவிரி - டெல்டா விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கல்லணை காவிரி ஆற்றின் மணலில் இறங்கி விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் விவசாய சங்கக் கொடி, கருப்புக்கொடி மற்றும் தேசியக் கொடிகளை ஏந்தியபடி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும், அனைத்து விவசாயிகளின் கடன்களையும் அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், மானாவாரி விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 177.5 டி.எம்.சி. காவிரி நீரை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam