கே.கே.நகரில் வேரோடு சாய்ந்த அரசமரம் – 4 பேர் படுகாயம்
சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச) சென்னை கே.கே.நகர், நெசப்பாக்கம், மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் சாலையோரத்தில் இருந்த அரசமரம் ஒன்று இன்று மதியம் திடீரென வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாகச் சென்ற நான்கு பேர் மரத்தின் கீழ் சிக்கி ப
Rr


சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச)

சென்னை கே.கே.நகர், நெசப்பாக்கம், மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் சாலையோரத்தில் இருந்த அரசமரம் ஒன்று இன்று மதியம் திடீரென வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

அப்போது அந்த வழியாகச் சென்ற நான்கு பேர் மரத்தின் கீழ் சிக்கி படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சரவணன் (45) என்பவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கே.கே.நகர் வன்னியர் தெருவைச் சேர்ந்த மணி (34) என்பவருக்கு இரண்டு கால்களிலும் முறிவு, நெஞ்சில் எலும்பு முறிவு மற்றும் முன்னந்தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

அவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் மாரியப்பன் (50) என்பவருக்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (64) என்பவருக்கு வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரம் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்ததற்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ