Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச)
பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலம் கடந்த 12 ஆண்டுகளில் ஒன்றிய அரசு ரூ.34 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரி மற்றும் பெட்ரோலியத் துறை மூலம் ஒன்றிய அரசு ஈட்டிய வருவாய் குறித்த புள்ளிவிவரங்களை நாடாளுமன்றத்தில் அரசு அதிகாரப்பூர்வமாக அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது கேள்விக்கு, ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, ஆகஸ்ட் 6ஆம் தேதி அளித்த பதிலில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட கலால் வரி
2014-15 முதல் 2025-26 வரையிலான 12 நிதியாண்டுகளில் பெட்ரோலியப் பொருட்கள் மூலம் மத்திய கலால் வரியாக வசூலிக்கப்பட்ட தொகை குறித்து அவர் வெளியிட்டுள்ள விவரம்:
- 2014-15: ரூ.99,068.44 கோடி
- 2015-16: ரூ.1,78,476.84 கோடி
- 2016-17: ரூ.2,42,690.52 கோடி
- 2017-18: ரூ.2,29,715.87 கோடி
- 2018-19: ரூ.2,14,369.40 கோடி
- 2019-20: ரூ.2,23,057.33 கோடி
- 2020-21: ரூ.3,72,969.96 கோடி
- 2021-22: ரூ.3,63,305.00 கோடி
- 2022-23: ரூ.2,87,575.30 கோடி
- 2023-24: ரூ.2,73,683.90 கோடி
- 2024-25: ரூ.2,76,562.90 கோடி (தற்காலிகம்)
- 2025-26: ரூ.3,08,381.30 கோடி (தற்காலிகம்)
கலால் வரியுடன் செஸ், சுங்கவரி, ஈவுத்தொகை உள்ளிட்ட பல்வேறு வருவாய்களையும் சேர்த்து, கடந்த 12 ஆண்டுகளில் பெட்ரோலியத் துறை மூலம் ஒன்றிய அரசுக்கு கிடைத்த மொத்த வருவாய் ரூ.34 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையில் வரிகளின் பங்கு
2026 ஆகஸ்ட் 3ஆம் தேதி டெல்லியில் நிலவிய பெட்ரோல், டீசல் விலை கட்டமைப்பு குறித்த விவரங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெட்ரோல் – ஒரு லிட்டர் ரூ.102.12:
- மத்திய கலால் வரி – ரூ.11.90
- டீலர் கமிஷன் – ரூ.4.45
- மாநில அரசின் VAT – ரூ.16.59
டீசல் – ஒரு லிட்டர் ரூ.95.20:
- மத்திய கலால் வரி – ரூ.7.80
- டீலர் கமிஷன் – ரூ.3.04
- மாநில அரசின் VAT – ரூ.13.91
“கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் மக்களுக்கு பலன் இல்லை”
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதெல்லாம் அதன் பலனை சாமானிய மக்களுக்கு வழங்காமல், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவராமல் ஒன்றிய அரசு அதிகப்படியான வரிகளை விதித்து வருவதாக சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வால் லாரி வாடகை, பேருந்து கட்டணம் உள்ளிட்ட போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிகளை உடனடியாகக் குறைத்து, எரிபொருள் விலையைச் சீரமைத்து விலைவாசி உயர்வைத் தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ