Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தும் தமிழ்நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்ட இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை ரத்து செய்து, பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திராவிடர் கழக துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி காவல்துறையால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், அரசு போராட்டங்களுக்கு எதிரானது அல்ல என்றும், போராட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார். மேலும், பேரணி தொடங்குவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ள இடங்கள் அனைத்தும் நெரிசல் மிகுந்த பகுதிகள் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், ஒருவருக்கு அனுமதி வழங்கினால் பின்னர் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விளக்கமளித்தார்.
இதையடுத்து நீதிபதி, பேச்சுரிமை, கருத்துரிமை போல் போராடுவதும் மக்களின் அடிப்படை உரிமை. நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? என காவல்துறையிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த வாகனப் பேரணிக்கான பெட்ரோல் செலவை அரசு வழங்கப் போவதில்லையே? பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டால், ஹெலிகாப்டரில் சென்றுதான் போராட முடியுமா? என நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
இதையடுத்து, பேரணிக்கு அனுமதி மறுத்ததற்கான காரணங்கள் குறித்து கூடுதல் விளக்கம் அளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam