Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
அமெரிக்காவுடனான தனது நிலைப்பாட்டை மேலும் கடுமையாக்கியுள்ள ஈரான், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்றும், அவரது பதவிக்காலம் முடியும் வரை தற்போதைய உத்தியையே தொடரப்போவதாகவும் கூறியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான ராஜதந்திர முயற்சிகள் முடங்கியுள்ள நிலையிலும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக தங்களது கோரிக்கைகளை வாஷிங்டன் ஏற்க வேண்டும் என்று தெஹ்ரான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையிலும் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.
ஈரான் ஊடகங்களின் தகவல்படி, பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃபின் ஆலோசகரான மஜித் ஷாகேரி, தற்போதைய அமெரிக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு தெஹ்ரானுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப் எங்களுடன் ஒரு உடன்பாட்டை எட்டமாட்டார். அவரது பதவிக்காலம் முடியும் வரை நாங்கள் அவருடன் பயணிப்போம் என்று ஷாகேரி கூறியுள்ளார்.
ஈரானின் நீண்டகால உத்தி என்று அவர் விவரிக்கும் ஒரு பதிவில், தற்போதைய சூழ்நிலையில் ராணுவ மோதலையும், பேச்சுவார்த்தை மூலமான தீர்வையும் தெஹ்ரான் தவிர்க்க வேண்டும் என்று அவர் வாதிட்டுள்ளார்.
வெற்றிக்கான பாதை போரிடுவதும் அல்ல, ஒப்பந்தம் செய்வதும் அல்ல - அது போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற நிலையை வெற்றி கிடைக்கும் வரை நிர்வகிப்பதே என்று அவர் எழுதியுள்ளார்.
மேலும், வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதை எதிர்த்தும் அவர் வாதிட்டுள்ளார்.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, வாஷிங்டனுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை உடனடியாக மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியத்தை நிராகரித்த மறுநாளே இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.
தற்போதைய கொள்கையின்படி ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்து வரும் நிலையிலேயே இந்த அரசியல் அறிக்கைகள் வந்துள்ளன.
மத்தியஸ்தர்கள் மூலம் மறைமுக ராஜதந்திர தொடர்புகள் தொடர்ந்தாலும், முறையான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான நிபந்தனைகள் குறித்து இரு தரப்பும் வெகு தொலைவில் இருக்கும் நேரத்தில், வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையேயான இடைவெளி மேலும் அதிகரித்து வருவதையே இந்த அறிக்கைகள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன.
Hindusthan Samachar / vidya.b