2026-27 நிதிநிலை அறிக்கை மீது ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு
சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவையில் இன்று 2026-27 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை கடுமையாக விம
2026-27 நிதிநிலை அறிக்கை மீது ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு


சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2026-27 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை கடுமையாக விமர்சித்தார்.

தேர்தல் காலத்தில் மக்களிடம் அள்ளி வீசிய வாக்குறுதிகள் அனைத்தையும் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு முற்றிலுமாக மறந்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்றும், அவற்றில் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய ஆட்சியில் தமிழகத்தில் நிலவும் சூழல் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசத்திலும் வித்தியாசமானதாக இருப்பதாக குறிப்பிட்டார்.

மக்கள் நலன் சார்ந்த புதிய திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்றும், ஏற்கனவே இருந்த பழைய திட்டங்களுக்கு பெயரை மட்டும் மாற்றி புதிய திட்டங்கள் போல பட்டியலிட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.

புதிய திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் தேடிக் கொண்டே இருப்பதாக கூறிய ஓ.பன்னீர்செல்வம், குறிப்பாக ஆறு இலவச எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் கடும் ஏமாற்றம் அடைந்து நிற்பதாகவும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b