Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முக்கிய அரசியல் நகர்வாக, நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு இரண்டு தனித் தீர்மானங்களை கொண்டு வருகிறது.
இதில் முதன்மையானது நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானமாகும். நீட் தேர்வு கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிரானது, சமூக நீதிக்கு புறம்பானது என்பது தமிழக அரசின் நீண்டகால நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தனித் தீர்மானத்தை முன்மொழிகிறார்.
மருத்துவக் கல்வியில் மாநில உரிமையை நிலைநாட்டவும், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை நடத்தவும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.
இதேபோல், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிராகவும் மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது சேவை அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் இந்த திருத்தம் அமைந்துள்ளதாக கூறி, அதனை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த தீர்மானத்தை முன்மொழிகிறார்.
இந்த இரண்டு முக்கிய தீர்மானங்களுக்கு இடையே, இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதமும் தொடர்ந்து நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b