Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை பெரம்பூர் கே.கே.ஆர். அவென்யூ பகுதியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தவெக பிரமுகர் ஜமால் முகமது உள்ளிட்ட 7 பேர் மீது திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரியாஸ் (41), ஜமால் முகமது குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ரியாஸை தொலைபேசியில் தொடர்புகொண்ட சிலர், அவரை கே.கே.ஆர். அவென்யூ பகுதிக்கு வரவழைத்ததாக தெரிகிறது.
அங்கு சென்ற ரியாஸிடம் ஜமால் முகமது உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரை தாக்கியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ரியாஸின் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து காயமடைந்த ரியாஸ், பெரியார் நகர் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஜமால் முகமது, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவுடன் நெருக்கமாக இருப்பவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக ரியாஸ் அளித்த புகாரின் பேரில், ஜமால் முகமது உள்ளிட்ட 7 பேர் மீது திரு.வி.க. நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ