Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னையில் தெருநாய்களால் ஏற்படும் வெறிநாய்க்கடி பாதிப்பை தடுக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெறிநாய்க்கடி தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்த தடுப்பூசி முகாமை அடுத்த 75 வேலை நாட்களுக்குள் நிறைவு செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, மொத்தம் இரண்டு லட்சம் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 30 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் நாள் ஒன்றுக்கு 100 நாய்கள் வீதம் பிடித்து தடுப்பூசி செலுத்தும். இதன் மூலம் தினமும் 3,000 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் கணக்கெடுக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
இதேபோல், வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகள் வைத்திருக்கும் உரிமையாளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். தங்கள் செல்லப்பிராணிகளுக்கு மாநகராட்சியின் கால்நடை மருத்துவ மையங்களில் இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கப்பட்ட இதேபோன்ற முகாமில், சுமார் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 545 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b