Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப்பெயர்களை அகற்றுவது தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீசார் பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த தெருப்பெயரில் சாதிப்பெயர் இருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
தெருக்கள் மற்றும் சாலைகளில் இடம்பெற்றுள்ள சாதிப்பெயர்களை அகற்ற வேண்டும் என கடந்த 1978-ஆம் ஆண்டிலேயே தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். இருப்பினும், பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் சில தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் சாதிப்பெயர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், ஆதி திராவிடர் நலத்துறை தற்போது சமூக நீதித் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தெருக்கள் மற்றும் சாலைகளில் உள்ள சாதிப்பெயர்களை அகற்றுவது தொடர்பான அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்த இதுவே சரியான நேரம் என நீதிபதி என்.ரமேஷ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்து, தலைமை நீதிபதி முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், தெரு மற்றும் சாலை பெயர்களில் நீடிக்கும் சாதிப்பெயர்களை அகற்றுவதில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முக்கியமான கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P