தஞ்சை - பட்டுக்கோட்டை, மன்னார்குடி - பட்டுக்கோட்டை ரயில் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல்
சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.) மத்திய ரயில்வே அமைச்சகம் தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, அத்திப்பட்டு - புத்தூர், மொரப்பூர் - தர்மபுரி, மன்னார்குடி - பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை உள்ளிட்ட 5 முக்கிய புதிய பாதை திட்டங்கள் மாந
தஞ்சை - பட்டுக்கோட்டை, மன்னார்குடி - பட்டுக்கோட்டை ரயில் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல்


சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

மத்திய ரயில்வே அமைச்சகம் தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, அத்திப்பட்டு - புத்தூர், மொரப்பூர் - தர்மபுரி, மன்னார்குடி - பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை உள்ளிட்ட 5 முக்கிய புதிய பாதை திட்டங்கள் மாநில அரசு நிலம் வழங்காததால் முடங்கிக் கிடப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.

குறிப்பாக இந்த இரு திட்டங்களுக்கும் இதுவரை ஒரு ஹெக்டேர் நிலம் கூட கையகப்படுத்தி தரப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் நிலுவையில் உள்ள 12 ரயில் திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துவது குறித்து போக்குவரத்து, வருவாய், ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, நீர்வளத்துறை உள்ளிட்ட ஐந்து துறை அதிகாரிகள் மற்றும் 13 மாவட்ட ஆட்சியர்கள், தெற்கு ரயில்வே அதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை புதிய அகலப்பாதைக்கு திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிலம் எடுக்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய அகலப்பாதைக்கு கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் ஒரு வாரத்தில் கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை திட்டம் உண்மையில் 93 ஆண்டுகால பழமையான கோரிக்கை என்றும், 2015-ல் ரூ.400 கோடி மதிப்பீட்டில் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தும் நிதி ஒதுக்கீடு மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் கிடப்பில் கிடப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரியில் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றிருந்தது.

தற்போது 13 மாவட்ட ஆட்சியர்களில் 11 பேர் நிலம் எடுப்பு பணிகளை முடிக்க உடனடி ஒப்புதல் அளித்துள்ளதாலும், பணிகளை ஓரிரு வாரங்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாலும், டெல்டா மாவட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்த இரு வழித்தடங்களும் அமைக்கப்பட்டால், தஞ்சாவூர், திருவாரூர், பட்டுக்கோட்டை பகுதிகள் நேரடி ரயில் இணைப்பைப் பெறுவதோடு, விவசாயப் பொருட்கள் மற்றும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் போக்குவரத்து பெரிதும் எளிதாகும்.

Hindusthan Samachar / vidya.b