Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
நவோதயா பள்ளிகளை தடுக்கும் முதல்வர் ஜோசப் விஜய் அரசு என தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,
தமிழகத்தைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நவோதயா பள்ளிகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உயர்தரமான சிபிஎஸ்இ (CBSE) கல்வியை முற்றிலும் இலவசமாக வழங்கும் நவோதயா பள்ளிகளைத் தடுக்கும் நோக்கில், விஜய் தலைமையிலான தவெக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நவோதயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தங்குமிடம், சத்தான உணவு, சீருடை மற்றும் புத்தகங்கள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. அத்தகைய பள்ளிகளைத் தடுப்பதன் மூலம், தவெக அரசு திமுகவின் அதே மாணவர் விரோதப் பாதையையே பின்பற்றி, அதன் ‘பி-டீமாக’
(B-Team) செயல்படுவது ஏமாற்றமளிக்கிறது.
எனவே, மாநில உரிமை என்ற பெயரில் அரசியல் செய்யாமல், மாணவர் நலனைக் கருதி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நவோதயா பள்ளிகளுக்குத் தேவையான நிலங்களைத் தவெக அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் இந்தப் பிடிவாதப் போக்கை அரசு கைவிடாவிட்டால், பாரதிய ஜனதா கட்சி மாணவர்களுக்காகத் தொடர்ந்து வீதிக்கு வந்து போராடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN