Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு முதலமைச்சர் நேற்றைய தினம் (10.08.2026) சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கரும்பு விவசாயிகளுக்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யாதது போன்ற தோற்றத்தினை உருவாக்கும் வகையில் சட்டமன்றத்தில் படிக்கப்பட்டு செய்திகுறிப்பாக வெளியிடப்பட்டுள்ளது உண்மைக்கு மாறான தகவல் என்று முன்னாள் அமைச்சர் இரா.இராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில், முன்னாள் முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் கரும்பு விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் 10.08.2026ல் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததை நாளிதழ்களில் த.வெ.க அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் கரும்பிற்கான சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.156 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாகவும், மாநில அரசால் கரும்பு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ஓராண்டில் 134 ரூபாய்க்கு மேல் வழங்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.
கரும்பு விவசாயிகளின் நலன்மீது மிகுந்த அக்கறை கொண்ட திராவிட மாடல் ஆட்சியில் கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2750லிருந்து ரூ.750 உயர்த்தி டன் ஒன்றுக்கு ரூ.3500ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
மாநில அரசால் கரும்புக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத் தொகையாக 2020–2021 அரவைப்பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.192.50 எனவும், 2021–2022 அரவைப்பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.195 எனவும், 2022–2023 அரவைப்பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.195 எனவும், 2023–2024 அரவைப்பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.215 எனவும், 2024–2025 அரவைப்பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.349 எனவும் சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் கரும்பிற்கான சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.156 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என்பதும், சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ஓராண்டில் 134 ரூபாய்க்கு மேல் வழங்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதும் முற்றிலும் தவறான செய்தி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
2021 முதல் 2026 வரையிலான கழக ஆட்சியில் 5,77,755 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக அவர்களது வங்கி கணக்கில் ரூ.1094.27 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு கரும்பு கிரையத் தொகையை உடனடியாக வழங்குவதற்காக ஆண்டுதோறும் வழிவகைக் கடனாக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.937.20 கோடி கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்படுள்ளது.
இவ்வாறாக கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை மற்றும் கரும்பு கிரையத் தொகையை தாமதமின்றி வழங்குவதற்காக மட்டுமே ரூ.2031.47 கோடி கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டும் மற்றும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கரும்பு விவசாயிகளின் நலன்காத்தவர் முன்னாள் முதல்வர் கழகத் தலைவர் அவர்கள் ஆவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN