தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்- தமிழக அரசை கடுமையாக விமர்சித்த அப்பாவு
சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்து சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,தமிழக அரசு நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் முதலில் தமிழ்த்
அப்பாவு


சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்து சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,தமிழக அரசு நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் வகையில், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலை 1970-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி அப்போதைய முதல்வர் கலைஞர் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து அரசாணை வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடக்கத்தில் ஒலிப்பேழை இன்றி அனைவரும் எழுந்து நின்று பாட வேண்டும் என அரசாணை பிறப்பித்ததாகவும் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டிய அவர், ஒன்றிய அரசின் சுற்றறிக்கை மற்றும் ஆளுநரின் ஆணை எனக் கூறி தமிழக அரசு வேடிக்கை பார்த்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

அதேநேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ள அப்பாவு, ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதைக் காரணம் காட்டி தமிழை அவமதிப்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய அதிகாரத்தை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டு, சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை பாதுகாக்கும் வகையில் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுடன் சட்டமாக்க தயங்குவது ஏன் என்றும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P