முதல்வர் ரேவந்த் ரெட்டியின் சகோதரர்களுக்கு ஷெல் நிறுவனங்கள் மூலம் பலனா? - பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் கே.டி.ஆர். பரபரப்பு குற்றச்சாட்டு
ஐதராபாத் , 11 ஆகஸ்ட் (ஹி.ச.) தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியின் சகோதரர்கள், ஷெல் நிறுவனங்களை உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசு வழங்கும் நிலம் மற்றும் ஒப்பந்தங்களில் பெருமளவில் பலன் பெற்று வருவதாக பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) செயல் தலைவ
A


ஐதராபாத் , 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியின் சகோதரர்கள், ஷெல் நிறுவனங்களை உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசு வழங்கும் நிலம் மற்றும் ஒப்பந்தங்களில் பெருமளவில் பலன் பெற்று வருவதாக பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) செயல் தலைவர் கே.டி. ராமராவ் (கே.டி.ஆர்.) பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள தெலங்கானா பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கே.டி.ஆர். கூறியதாவது:-

முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியின் சகோதரர்கள், பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்களாக மாறி வருகின்றனர்.

போதிய தகுதிகள் இல்லாத நிறுவனங்கள், சிறிய குடியிருப்பு முகவரிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில நிறுவனங்களில் ஒரு ஊழியர் கூட இல்லை.

இதுபோன்ற ஒரு நிறுவனத்துக்கு சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாக கே.டி.ஆர். குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, அனுமுலா கொண்டல் ரெட்டி தனது லிங்க்ட்இன் சுயவிவரத்தில் ‘டெசரக் அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் தலைவராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

ரூ.1 லட்சம் மூலதனம்

இந்த நிறுவனத்துக்கு வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே மூலதனம் இருப்பதாகவும், பாட்டன்சேரியில் உள்ள சிறிய குடியிருப்பு முகவரியில் இருந்து நிறுவனம் செயல்படுவதாகவும் BRS தரப்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரங்காரெட்டி மாவட்டம் மகேஸ்வரம் மண்டலம் ராவிரியால் பகுதியில் உள்ள சுமார் 5 ஏக்கர் நிலம், டெசரக் நிறுவனத்துக்கு ரூ.7 கோடிக்கு ஒதுக்கப்பட்டதாகவும், அந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகவும் பி.ஆர்.எஸ் செய்தித் தொடர்பாளர் மன்னே கிரிஷாங்க் ஒரு நாள் முன்பு குற்றம் சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக கே.டி.ஆரும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒப்பந்தங்கள் குறித்தும் குற்றச்சாட்டு

ரேவந்த் ரெட்டியின் மற்றொரு சகோதரர் ஜெகதீஷ் ரெட்டி அரசு ஒப்பந்தங்களை பெற்று வருவதாகவும் கே.டி.ஆர். குற்றம் சாட்டினார்.

அதேபோல், முதல்-மந்திரியின் மைத்துனர் ஸ்ருஜன் ரெட்டிக்கு சிங்கரேணி நிறுவனத்தில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, ரேவந்த் ரெட்டியின் குடும்பத்தினருடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு நிலம் மற்றும் ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதாக

பி.ஆர்.எஸ் தரப்பினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை தெலங்கானா அமைச்சர் டி. ஸ்ரீதர் பாபு கடுமையாக மறுத்துள்ளார்.

இதனால், ரேவந்த் ரெட்டி குடும்பத்தினருடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அரசு நிலம் மற்றும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட விவகாரம் தெலங்கானா அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA