Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி, அவரது மனைவி தனலட்சுமி மற்றும் மகள் பூவரசி (23) ஆகியோர் வசித்து வந்தனர்.
பூவரசி கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள எலக்ட்ரிக் இருசக்கர வாகன ஷோரூமில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரம்பட்டி பகுதியைச் சேர்ந்த அக்ஷயன் என்பவருடன் பூவரசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலைத் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பல்லடம் அருகே உள்ள கோவில் ஒன்றில் பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை பூவரசி தனது குடும்பத்தினரிடம் மறைத்து வந்ததாகவும், பின்னர் இதுகுறித்து அவரது தாயார் தனலட்சுமிக்கு தெரியவந்த நிலையில், பூவரசி அணிந்திருந்த தாலியை அவர் கழற்றி வீசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், மகளுக்கு வேறு நபருடன் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முயற்சி செய்ததாகவும் தெரிகிறது.
இதனை அறிந்த அக்ஷயன், பல்லடம் அருகே உள்ள விடுதி ஒன்றில் கடந்த 2 அல்லது 3 நாட்களாக தங்கியிருந்து, அவ்வப்போது பூவரசியின் வீட்டிற்கு சென்று அவரை தன்னுடன் அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் பூவரசியை அழைத்துச் செல்ல வீட்டிற்கு வந்த அக்ஷயனுக்கும், பூவரசியின் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் கிடந்த அரிவாளை எடுத்த அக்ஷயன், பூவரசி மற்றும் அவரது தாயார் தனலட்சுமி ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் அங்கிருந்து தப்ப முயன்ற அக்ஷயனை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்ஷயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் குழுவினரும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam