ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் வழக்கு குற்றச்சாட்டு பதிவு நிறுத்தி வைப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.) 2024 மக்களவைத் தேர்தலின்போது நெல்லை விரைவு ரயிலில் சுமார் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு பதிவு நடவடிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத
உயர்நீதிமன்றம்


சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

2024 மக்களவைத் தேர்தலின்போது நெல்லை விரைவு ரயிலில் சுமார் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு பதிவு நடவடிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக இந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், எஸ்.ஆர். சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரியும், கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் எஸ்.ஆர். சேகர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில், போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், சிபிசிஐடி போலீசார் இயந்திரத்தனமாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நாளை நடைபெறவிருந்த குற்றச்சாட்டு பதிவு நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P