காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு – மு.வீரபாண்டியன்
சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச) மத்திய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய ‘மாற்றத்திற்கான நடைபயணம்’ கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கி வரும் 15ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை எம்.ஜி.ஆர். நகர் அஜந்தா
CPI Veerapandian


சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச)

மத்திய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய ‘மாற்றத்திற்கான நடைபயணம்’ கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கி வரும் 15ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை எம்.ஜி.ஆர். நகர் அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற நடைபயண பிரசார இயக்கத்தை, அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

மத்திய அரசை கண்டித்து ஆகஸ்ட் 6 முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் ‘மாற்றத்தை நோக்கி நடைபயணம்’ நடைபெற்று வருகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், கல்வி மற்றும் மருத்துவம் அரசு சார்பில் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டின் வளங்களை சுரண்டுவதை தடுக்க வேண்டும். உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும் என்பனவும் எங்களது முக்கிய கோரிக்கைகள்.

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளோம். இந்தப் பேரணிக்கு சமூக இயக்கங்கள் பேராதரவு அளிக்க வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியபோது,

நீட் தேர்வு தேவையில்லை என்பதே எங்களது நிலைப்பாடு.

நாட்டின் தலைசிறந்த மருத்துவர்கள் அனைவரும் நீட் தேர்வின் மூலமாக மருத்துவம் படித்தவர்கள் அல்ல. எனவே நீட் தேவையில்லை. நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்பது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட வேண்டும்.

“பெரும் முதலாளிகளிடம் உள்ள செல்வத்தில் ஒரு பகுதி அரசுக்கு வர வேண்டும்”

இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சில பெரும் முதலாளிகளிடம் நாட்டின் பெரும் செல்வம் குவிந்துள்ளது.

அவர்களிடம் உள்ள செல்வத்தில் மூன்றில் ஒரு பங்காவது அரசுக்கு வந்தால் மட்டுமே மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளை சிறப்பாக செயல்படுத்த முடியும்.

தொகுதி மறுவரையறையைப் பொறுத்தவரை, தற்போது உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையே போதுமானது.

தேவையற்ற அரசியல் தாவல்கள் மற்றும் முறையற்ற மாற்றங்கள் தேவையில்லை.

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு எதிர்க்கட்சிகளின் விவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் முக்கியத்துவம் அளித்தவர் அம்பேத்கர்.

ஆனால், அந்த ஜனநாயக அமைப்புகளையும் விவாத முறைகளையும் தற்போது மத்திய அரசு சீர்குலைத்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

“காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் வேண்டும்”

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காவிரி விவகாரம் மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.

குறிப்பாக, காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ