சதுரகிரி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ - சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
விருதுநகர், 11 ஆகஸ்ட் (ஹி.ச) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. வறண்ட வானிலை காரணமாக மலையின் பல்வேறு பகுதிகளில் தீ மளமளவென பரவி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆ
Wildfire rages on Sathuragiri Hill


விருதுநகர், 11 ஆகஸ்ட் (ஹி.ச)

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. வறண்ட வானிலை காரணமாக மலையின் பல்வேறு பகுதிகளில் தீ மளமளவென பரவி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்ல தயாராகி வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் வத்திராயிருப்பு வனச்சரகம் பீட் 3 ரத்தினக்கல் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதை அணைக்கும் பணியில் வத்திராயிருப்பு வனத்துறையினர் ஈடுபட்டனர்.

ஆனால் 2ம் நாளான நேற்றும் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதனால் மலை பகுதியில் கடும் புகை மூட்டம் நிலவியது. நேற்று இரவு நேரங்களில் தீப்பற்றி எரிவதை பார்க்க முடிந்தது.

அதன்படி, காட்டுத்தீ காரணமாக இன்று ஒரு நாள் முழுவதும் பக்தர்கள் யாரும் சதுரகிரி மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதையில் தீயணைப்பு மற்றும் வனத்துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், காட்டுத்தீயின் தன்மை மற்றும் நாளைய வானிலை நிலவரத்தை பொறுத்து, நாளை நடைபெற உள்ள ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மலைப்பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b