Enter your Email Address to subscribe to our newsletters

பெல்பாஸ்ட் , 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 7-ந் தேதி நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்த நிலையில், 3-வது ஒருநாள் போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த அயர்லாந்து வீரர்கள், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் அயர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கும் தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தன.
எனினும் ரஹ்மானுல்லா குர்பாஸ் சிறப்பாக ஆடி 71 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். தொடர்ந்து ரஷித் கான் பொறுப்புடன் விளையாடி 43 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 44.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.
இதன் மூலம் அயர்லாந்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி, ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA