ஆடி அமாவாசையையொட்டி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்த பொதுமக்கள்
சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னையில் நீர்நிலைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல
Aadi


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னையில் நீர்நிலைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் திரண்டனர். குறிப்பாக பட்டினப்பாக்கம் கடற்கரையில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு நீர்நிலைகளிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தாய், தந்தை உள்ளிட்ட முன்னோர்களை இழந்தவர்கள், அவர்களின் ஆசியைப் பெறும் வகையில் ஆடி அமாவாசை நாளில் நீர்நிலைகளில் திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

முன்னோர்களுக்கு உணவுப் படையல் வைத்து வழிபாடு செய்ததுடன், கால்நடைகளுக்கு அகத்திக்கீரை வழங்கியும் பொதுமக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து மத வழக்கப்படி, தை, ஆடி, புரட்டாசி உள்ளிட்ட மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.

இந்த நாட்களில் முன்னோர்களை நினைவு கூர்ந்து திதி மற்றும் தர்ப்பணம் உள்ளிட்ட வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ