தமிழகத்திற்கு ரூ.11,000 கோடி இழப்பு ஏற்படும் கனிமச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் வரி விதிக்கும் உரிமையைப் பறிக்கும் வகையில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் 9டி என்ற புதிய பிரிவை சேர்க்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்த
Anbumani


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் வரி விதிக்கும் உரிமையைப் பறிக்கும் வகையில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் 9டி என்ற புதிய பிரிவை சேர்க்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்த முன்வரைவுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

கனிம வளங்கள் மீது மாநில அரசுகள் தன்னிச்சையாக வரி, கூடுதல் வரி மற்றும் தீர்வைகளை விதிக்க முடியாத வகையில் இந்த சட்டத் திருத்தம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகள் நிலுவையில் இருந்தாலும், சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு அவற்றை வசூலிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2025-26ஆம் ஆண்டில் கனிம வளங்கள் மீதான வரி, ராயல்டி உள்ளிட்டவற்றின் மூலம் தமிழ்நாடு அரசு ரூ.4,100 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவும், 2026-27ஆம் ஆண்டில் ரூ.11,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தின் வருவாய் ஆதாரங்கள் பாதிக்கப்படும் என்றும், குறிப்பாக கனிம வளங்கள் தொடர்பான நிலுவை வரி மற்றும் அபராதத் தொகைகளை வசூலிப்பதில் தடையேற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், 25.07.2024 அன்று உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு, கனிமங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருப்பதாக தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, அந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலேயே தற்போதைய சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, மாநில அரசுகளின் உரிமைகளையும் வருவாய் ஆதாரங்களையும் பாதிக்கும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ