ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் கிடா வெட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
திருநெல்வேலி, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. முன்
Arrangements made for goat sacrifice rituals at the Karaiyar Sorimuthu Ayyanar Temple on the occasion of Aadi Amavasai.


திருநெல்வேலி, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

முன்னோர்களை வழிபடும் புனித நாளான ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே காரையாறு பகுதிக்கு வருகை தர தொடங்கியுள்ளனர். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று மாலை ஆடி அமாவாசையின் முக்கிய நிகழ்வுகளான பூக்குழி இறங்குதல் மற்றும் கிடா வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

பக்தர்கள் தங்களின் குடும்பங்களுடன் தங்கி சாமி தரிசனம் செய்வதற்காக கோயில் வளாகத்தில் தற்காலிகமாக சுமார் 1,500 குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 6 நாள்கள் வரை தங்குவதற்கு வனத்துறை கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

மலைப்பகுதி என்பதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறையினரும், வனத்துறையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வனச்சூழல் மற்றும் தாமிரபரணி நதியின் தூய்மையைப் பாதுகாக்கும் பொருட்டு, தனியார் வாகனங்கள் கோயிலுக்குச் செல்ல முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக அகஸ்தியர்பட்டி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சுமார் 150 சிறப்புப் பேருந்துகள் அதிகாலை முதலே இயக்கப்படுகின்றன.

பக்தர்கள் அரசுப் பேருந்துகள் மூலம் மட்டுமே கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

Hindusthan Samachar / vidya.b