Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை என மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில்,
பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சொத்து வரி செலுத்தி வரும் சொத்துகளுக்கு உரிய தரவுகளின் அடிப்படையில் திருத்திய மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு திருத்திய மதிப்பீடு தொடர்பான அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பில் ஆட்சேபனை இருப்பவர்கள், அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேல்முறையீடுகள் பெறப்பட்ட பின்னர் அவை உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறைவாக மதிப்பீடு செய்யப்பட்ட சொத்துகளுக்கான மதிப்பீடு உரிய தரவுகளின் அடிப்படையில் திருத்தம் செய்யப்படுவதை, சென்னை மாநகராட்சியில் ஒட்டுமொத்தமாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக கருதக்கூடாது என மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பரவி வரும் உண்மைக்கு மாறான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ