முதல்வர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்குகள் -ஆகஸ்ட் 25-க்கு ஒத்திவைப்பு
சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக முதல்வர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில், அவருக்கு எதிரான மனுக்களை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாக விஜய் தரப்பில் சென்னை உயர்
விஜய்


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக முதல்வர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில், அவருக்கு எதிரான மனுக்களை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாக விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தேர்தல் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகளில் விஜய் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஜி.மாசிலாமணி மற்றும் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதால், அதற்காக 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், 4 வார கால அவகாசம் வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.

மேலும், ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் நிராகரிக்கக் கோரும் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்குகளின் விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதேபோல், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கும் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam