தொகுதி மறு வரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு திமுக ஆதரவு - உதயநிதி ஸ்டாலின்
சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக அரசு கொண்டுவந்த தனித்தீர்மானத்தை திமுக ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அவர், “தொகுதி மறுவரைய
உதயநிதி


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக அரசு கொண்டுவந்த தனித்தீர்மானத்தை திமுக ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அவர், “தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை முதலில் எடுத்துக் கூறியவர் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழ்நாடு பாதிக்கக் கூடாது என திமுக ஆட்சியிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 7 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

ஏப்ரல் 16ஆம் தேதி மசோதா எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. ஸ்டாலினே மசோதாவின் நகலை எரித்தார்.

திமுகவின் கடுமையான எதிர்ப்பால்தான் பாஜக கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது.

தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம்.

தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு மீண்டும் கொண்டு வர உள்ளதாக தெரிகிறது. 1971 முதல் 2026 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப்போடும் சட்டத்திருத்தம் இந்த ஆண்டுக்குள் கொண்டுவரப்படாவிட்டால், 2027ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய அரசியலமைப்புச் சட்டம் வழிவகுக்கும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை திமுக ஆதரிக்கிறது. அதற்காக தொகுதி மறுவரையறை செய்யப்பட்டாலும், 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டின் விகிதமான 7.18 சதவீதம் குறையக்கூடாது.

இதனை வலியுறுத்தியே அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கிறோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P