Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட தெ.புதுக்கோட்டை கிராமத்தில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அடுத்தடுத்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் உள்ள நாடக மேடையில் வண்ணத்தான் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (36) என்பவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளையும் மர்ம நபர்கள் உடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது இறப்பு நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் இருந்த சின்னசாமி (65), மர்ம நபர்களிடம் “யார் நீங்கள்?” என கேட்டதாகவும், அவரையும் கும்பல் அரிவாளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து அங்கிருந்து சென்ற மர்ம கும்பல், குறிச்சி அருகே வீட்டின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த பூமி (55) என்பவரையும் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் இருந்து தப்பி வீட்டிற்குள் சென்ற பூமியை மர்ம நபர்கள் பின்தொடர்ந்து சென்று, வீட்டில் இருந்த பெண்களை மிரட்டி விளக்கை போடச் சொன்னதுடன், பீரோ உள்ளிட்ட பொருட்களையும் அரிவாளால் தாக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த ராஜேந்திரனுக்கு மானாமதுரை அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்தியாளர்களை மிரட்டியதாக காவல் ஆய்வாளர் மீது புகார்
இதனிடையே, சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கண்ணீர் மல்க நடந்த சம்பவத்தை கூறி, தங்களை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த இளையான்குடி காவல் ஆய்வாளர் துரைராஜ், செய்தியாளர்கள் வீடியோ பதிவு செய்வதை தடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. “அவர்களை வீடியோ எடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்” என வீட்டின் உரிமையாளரிடம் கூறியதுடன், செய்தியாளர்களிடம் “வீடியோ எடுக்காதீர்கள், உங்கள் மீது வழக்குப்பதிவு செய்வேன்” என எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பிரச்சினைகளை செய்தியாளர்களிடம் தெரிவித்து பேட்டி அளித்துக் கொண்டிருந்த நிலையில், அதனை பதிவு செய்ததற்காகவே காவல் ஆய்வாளர் மிரட்டியதாக பத்திரிகையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்களை காவல்துறையினர் மிரட்டுவதாக கூறப்படும் இதுபோன்ற சம்பவங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிசிடிவி கேமராக்களையும் உடைத்த மர்ம கும்பல்
குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் முன்னாள் மானாமதுரை டி.எஸ்.பி.யின் நடவடிக்கையின் அடிப்படையில் கிராமங்கள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவை முறையாக பராமரிக்கப்படாத நிலையில், தெ.புதுக்கோட்டையில் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் உடைத்து சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு முறையாக செயல்படவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளை அடையாளம் காணவும், குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும் சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அவற்றை முறையாக பராமரித்து தொடர்ந்து கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மானாமதுரை டி.எஸ்.பி. மற்றும் சிவகங்கை டி.எஸ்.பி. ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மர்ம கும்பல் யார், எதற்காக தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து மானாமதுரை மற்றும் இளையான்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மர்ம நபர்களை விரைந்து கைது செய்வதுடன், தெ.புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam