Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 12 ஆகஸ்ட் (ஹி.ச)
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கைக்காய் விலை வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது.
கிலோ ரூபாய் 10-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், அதே வேளையில் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த மாதம் வரை திருச்செந்தூர் மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சில்லறை விற்பனையில் சில இடங்களில் 60 ரூபாய் வரை கூட விற்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது திடீரென விலை கடுமையாக சரிந்து கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் விளைச்சல் அதிகரிப்பு தான் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். திருச்செந்தூர், ஆறுமுகநேரி, காயாமொழி, மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை சாதகமாக இருந்ததால் முருங்கை மரங்களில் காய்ப்பு அமோகமாக உள்ளது. தினமும் டன் கணக்கில் முருங்கைக்காய் சந்தைக்கு வருவதால், தேவையை விட வரத்து அதிகரித்து விலை சரிவுக்கு வழிவகுத்துள்ளது.
விலை சரிவால் இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சத்து நிறைந்த முருங்கைக்காயை குறைந்த விலையில் வாங்க முடிவதால் அன்றாட சமையலில் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
அதே சமயம், பறிப்பு கூலி, போக்குவரத்து செலவு கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே அரசு நேரடி கொள்முதல் செய்யவோ அல்லது மதிப்பு கூட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b