தூத்துக்குடி அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் - தேடுதல் பணிகள் தீவிரம்
தூத்துக்குடி, 12 ஆகஸ்ட் (ஹி.ச) தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த அந்தோணியார் பிச்சைக்குச் சொந்தமான விசைப்படகில், தாளமுத்து நகரைச் சேர்ந்த பனிமயராஜா (25) உள்ளிட்ட 10 பேர் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி இரவு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்
Fisherman missing after accidentally falling


தூத்துக்குடி, 12 ஆகஸ்ட் (ஹி.ச)

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த அந்தோணியார் பிச்சைக்குச் சொந்தமான விசைப்படகில், தாளமுத்து நகரைச் சேர்ந்த பனிமயராஜா (25) உள்ளிட்ட 10 பேர் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி இரவு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

தூத்துக்குடியிலிருந்து 7 கடல் மைல் தொலைவில் படகு சென்றபோது, படகில் இருந்த பனிமயராஜாவைக் காணவில்லையாம்.அவர் கடலில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகித்த சக மீனவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றபோதும், கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் காரணமாக அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து, தூத்துக்குடி கடலோர பாதுகாப்புப் படை, சக மீனவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 3 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று பனிமயராஜாவைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தருவைகுளம் மரைன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணாமல் போன மீனவர் பனிமயராஜாவை தேடும் பணியில் சக மீனவர்களும் கடலோர காவல் துறையினரும் இன்று 2வது நாளாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பல படகுகளில் சென்று அவர்கள் கடல் பகுதி முழுவதும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன மீனவரை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b