சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாளை (ஆகஸ்ட் 13) முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடைபெற்று வரும் தற்போதைய நிதிநிலை கூட்டத
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாளை (ஆகஸ்ட் 13) முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடைபெற்று வரும் தற்போதைய நிதிநிலை கூட்டத்தொடரின் இன்றைய (ஆகஸ்ட் 12) அமர்வில் இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் 13 (வியாழன்), ஆகஸ்ட் 14 (வெள்ளி), ஆகஸ்ட் 15 (சனிக்கிழமை - சுதந்திர தினம்), மற்றும் ஆகஸ்ட் 16 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்களுக்குச் சட்டமன்றக் கூட்டம் நடைபெறாது.

இந்த 4 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, ஆகஸ்ட் 17-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 17 அன்று முதல் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கவுள்ளது. முதல் நாளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவற்றின் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளன.

இன்றைய கூட்டத்தில் 2026-2027-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதிலளித்து உரை நிகழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து இன்றைய கூட்டத்தொடர் நிறைவு பெற்று அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிதிநிலை கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b