Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு பரிசல் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடை மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் மழைப்பொழிவு காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து தொடர்ந்து இதே அளவில் நீடிப்பதால், ஒகேனக்கல் அருவிகளில் நீரின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசல் இயக்கத்திற்கு தடை விதித்துள்ளது. பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் குளிப்பதற்கும் தடை நீடிக்கிறது.
நீர்வரத்து சீரான நிலைக்கு திரும்பும் வரை இந்த தடை உத்தரவு தொடரும் எனவும், சுற்றுலா பயணிகள் ஆற்றின் கரையோரம் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b