Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு, கொல்கத்தாவில் இருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 11.30 மணி அளவில், சென்னையில் தரையிறங்க வந்து கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 222 பயணிகள் 7 விமான ஊழியர்கள் உட்பட, 229 பேர் இருந்தனர்.
இந்த நிலையில் விமானத்தின் இடது பக்கம் இயந்திரத்தில், திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. அதோடு எண்ணெய் கசிவும் உருவாகியது.
இந்த நிலையில் விமானத்தை, சென்னையில் சாதாரணமாக தரை இறக்குவது, மிகப்பெரும் ஆபத்து என்பதை விமானி உணர்ந்தார். இதை அடுத்து விமானி அவசரமாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதை அடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியில், அவசர நிலையை அறிவித்தனர்.
அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு வண்டிகள், மருத்துவ குழுவினர், அதிரடி படையினர் உட்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் துரிதமாக செய்து முடிக்கப்பட்டன.
அதுவரையில் அந்த விமானம் தரையிறங்காமல், வானில் தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டு இருந்தது.
இந்த நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து முடித்த பின்பு, விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி விமானம் இரவு 11.37 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், பத்திரமாக தரையிறங்கியது. விமானத்திலிருந்த 222 விமான ஊழியர்கள் உட்பட 229 பேர், நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இதை அடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறங்கி சென்ற பின்பு, விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, விமானத்தை பழுது பார்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த விமானம் முழுமையாக பழுது பார்த்து சீரமைப்பதற்கு முன்பு, மீண்டும் உடனடியாக வானில் பறக்க தகுதியற்றது என்று தெரிய வந்தது. இதை அடுத்து நள்ளிரவு 12 மணி அளவில், அந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இயங்க முடியாத நிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அந்த விமானத்தை, ரிமோட் ஃபே எனப்படும் ஒதுக்குப்புறமான இடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதோடு இது குறித்து முழுமையாக விசாரணை நடத்துவதற்கு டெல்லியில் உள்ள டி ஜி சி ஏ எனப்படும், டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN