Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சூர் , 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உள்ளது.
கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, உலக அளவில் அதிக திருமணங்கள் நடைபெறும் கோவில்களில் ஒன்றாக குருவாயூர் கிருஷ்ணன் கோவில் திகழ்கிறது.
மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் குருவாயூரில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், சிங்கம் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான வருகிற ஆகஸ்டு 23-ந்தேதி, குருவாயூர் கோவிலில் இதுவரை 377 திருமணங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் திருமணங்களுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த எண்ணிக்கை 400-ஐ தாண்டக்கூடும் என்று குருவாயூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ஆகஸ்டு 23-ந்தேதி கோவிலில் திருமண ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களின் வருகையை சுமுகமாக கையாள தேவஸ்வம் போர்டு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் மற்றும் திருமணக் குழுவினருக்கு உதவ தேவஸ்வம் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கோவில் தரிசனம் மற்றும் திருமணச் சடங்குகள் எவ்வித இடையூறும் இன்றி நடைபெற பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தேவஸ்வம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், வருகிற ஆகஸ்டு 30-ந்தேதி 295 திருமணங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி ஒரே நாளில் 334 திருமணங்கள் குருவாயூர் கோவிலில் நடைபெற்றன.
இதுவே இதுவரை ஒரே நாளில் நடைபெற்ற அதிகபட்ச திருமணங்களின் எண்ணிக்கையாக இருந்த நிலையில், வருகிற ஆகஸ்டு 23-ந்தேதி திருமணங்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டினால் புதிய சாதனை படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA