ஆடி அமாவாசை - தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு
சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள புனித நீர்நிலைகள், ஆற்றுப் படித்துறைகள் மற்றும் கடற்கரைகளில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
ஆடி அமாவாசை - தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள புனித நீர்நிலைகள், ஆற்றுப் படித்துறைகள் மற்றும் கடற்கரைகளில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

பித்ருக்களுக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படும் ஆடி அமாவாசை அன்று, நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைந்து, குடும்பத்திற்கு சுபிட்சம் ஏற்படும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. இதனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு கூட்டம் அலைமோதியது.

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் படித்துறைகளில் அதிகாலை 4 மணி முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்து எள்ளும் தண்ணீரும் இறைத்து தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வைதீகர்கள் மந்திரங்கள் ஓத பக்தர்கள் உருக்கமுடன் வழிபட்டனர்.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். கடலில் நீராடி, தீர்த்தக் கரையில் அமர்ந்து முன்னோர்களுக்காக பிரார்த்தனை செய்த காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடற்கரைப் பகுதிகளிலும் முன்னோர் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. கடலும் அலையும் சங்கமிக்கும் இடத்தில் நின்று பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தர்ப்பணம் கொடுத்தனர். அதிகாலை முதலே படித்துறை முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காவிரி ஆறு கடலோடு சங்கமிக்கும் பூம்புகார் காவிரி சங்கமத்திலும் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். நீர் நிலைகளில் வழிபாடு செய்வதால் பாவங்கள் நீங்கும் என்ற ஐதீகத்துடன் பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.

Hindusthan Samachar / vidya.b