Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
மும்பை குர்லா பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 4 முதல் 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களை உயிருடன் மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குர்லா அருகே உள்ள சிராக் நகர் பகுதியில் கவுசியா சாவ்ல் என்ற குடியிருப்பு உள்ளது. இங்கு இன்று அதிகாலை 3.48 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
மலையடிவாரத்தின் ஒரு பகுதி எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்ததில், மண் மற்றும் இடிபாடுகள் அருகில் இருந்த 2 முதல் 3 வீடுகளின் மீது விழுந்தன.
இதில் வீடுகளில் இருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மும்பை தீயணைப்புப்படையினர், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் இடிபாடுகளை அகற்றி, சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, இடிபாடுகளுக்குள் மேலும் 4 முதல் 5 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனால் மீட்புக்குழுவினர் ஒவ்வொரு பகுதியாக இடிபாடுகளை அகற்றி, சிக்கியவர்களை உயிருடன் மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழைக்கு மத்தியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA