முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு துணைக் கண்காணிப்பு குழு ஆய்வு
தேனி, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) தேனி மாவட்டம் தமிழக–கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் துணைக் கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக நடைபெறும
முல்லைப் பெரியாறு


தேனி, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

தேனி மாவட்டம் தமிழக–கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் துணைக் கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த ஆய்வில், அணையின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர்.

தேசிய அணைகள் பாதுகாப்பு துணைக் கண்காணிப்பு குழுத் தலைவர் கிரிதர் தலைமையில் நடைபெறும் ஆய்வில், உதவி இயக்குநர் கலீல் அகமது உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் பெரியாறு அணை கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வின், பெரியாறு அணை சிறப்பு கோட்ட நிர்வாகப் பொறியாளர் செல்வம் உள்ளிட்டோரும், கேரளா நீர்ப்பாசனத்துறை சார்பில் கண்காணிப்பு பொறியாளர் லிவின்ஸ் பாபு, செயற்பொறியாளர் கோஜி உள்ளிட்டோரும் ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.

அணையின் ஷட்டர் பகுதி, கேலரி பகுதி, நீர்க்கசிவு பகுதிகள், அணையின் உறுதித்தன்மை, பேபி அணை மற்றும் பலப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், அணைக்கு செல்லும் வல்லக்கடவு பாதை சீரமைப்பு தொடர்பான அம்சங்களும் ஆய்வில் கவனத்தில் கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆய்வை தொடர்ந்து, இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அதன் அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக தேசிய அணைகள் பாதுகாப்பு துணைக் கண்காணிப்பு குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்வது, தமிழக விவசாயிகள் மற்றும் தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam