Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தி, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 12 ஆண்டுகள் கடந்தும், கேரள அரசின் ஒத்துழைப்பின்மை காரணமாக பணிகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அணையை வலுப்படுத்துவதற்கான பணிகளுக்காக இயந்திரங்களை எடுத்துச் செல்ல ஏதுவாக கேரள வனப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க உத்தரவிட்டிருந்தும், அந்த உத்தரவு இதுவரை செயல்படுத்தப்படவில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அணையின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பூச்சுப் பணிகளை மேற்கொள்ள முல்லைப் பெரியாறு கண்காணிப்புக் குழு வழங்கிய வழிகாட்டுதலின்படி செயல்பட கேரள அரசு தடையாக இருப்பதாகவும், பணிகளுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்காமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வல்லக்கடவு சாலையை சீரமைப்பதற்காக தமிழ்நாடு அரசு ரூ.87.64 லட்சம் வழங்கியுள்ள போதிலும், இதுவரை சாலை பராமரிப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணையின் கீழ்ப்பகுதியில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை மேற்கொள்வதற்குத் தேவையான சில தரவுகளை கேரள அரசிடம் தமிழ்நாடு கேட்டிருந்த நிலையில், அவையும் இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும், முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் நீர்வரத்தை முன்கூட்டியே கணிப்பதற்குத் தேவையான நிகழ்நேர மழைப்பொழிவு மற்றும் வெள்ளத் தரவுகளையும் கேரள அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை.
இத்தரவுகளை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை நிறுவியுள்ளதாக கேரள அரசு தெரிவித்திருந்தாலும், அதன் தரவுகள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை தாமதமின்றி மேற்கொள்ளும் வகையில், மரங்களை வெட்டுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின்படி அணையின் பராமரிப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளை முழுமையாக மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு அனுமதி வழங்க மீண்டும் உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P