நீட் கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) NEET-UG 2026 கலந்தாய்வின்போது வெளிநாட்டவர் பிரிவை தவறுதலாக தேர்வு செய்த மாணவர், OCI பிரிவில் பதிவு செய்து கலந்தாய்வில் பங்கேற்கும் வகையில் மருத்துவ கலந்தாய்வுக்குழு இணையதளத்தை திறக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வ
Madurai High Court


மதுரை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

NEET-UG 2026 கலந்தாய்வின்போது வெளிநாட்டவர் பிரிவை தவறுதலாக தேர்வு செய்த மாணவர், OCI பிரிவில் பதிவு செய்து கலந்தாய்வில் பங்கேற்கும் வகையில் மருத்துவ கலந்தாய்வுக்குழு இணையதளத்தை திறக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பிரஜித் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘தன்னிடம் செல்லுபடியாகும் OCI அட்டை உள்ளது. NEET-UG 2026 தேர்வில் பங்கேற்று தகுதி பெற்றுள்ளேன். இதனால் அகில இந்திய இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளேன்.

ஆனால், கலந்தாய்வுக்கான ஆன்லைன் பதிவின்போது கவனக்குறைவாக ‘Foreign National (Other than OCI)’ என்ற பிரிவை தேர்வு செய்துவிட்டேன். அதற்கு பதிலாக ‘OCI’ பிரிவை தேர்வு செய்திருக்க வேண்டும்.

பின்னர் இந்த தவறை சரிசெய்ய முயன்றபோது, MCC இணையதளத்தில் OCI அட்டையை பதிவேற்றுவதற்கான வசதி இல்லை. எனவே, ‘Foreign National’ பிரிவை ‘OCI’ என மாற்றி, உரிய ஆவணங்களை பதிவேற்றும் வகையில் இணையதளத்தை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், ‘OCI பிரிவை கோரும் மாணவர், MCC இணையதளத்தில் உரிய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். அவற்றை NRI ஆய்வுக்குழு பரிசீலித்த பின்னரே அடுத்தகட்ட கலந்தாய்வு நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்' எனத் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, “இது ஒரு மாணவரின் கல்வி எதிர்காலம் தொடர்பான விவகாரம் என்பதை கருத்தில் கொண்டு, மனுதாரருக்கு உரிய வாய்ப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்படி, மருத்துவ கலந்தாய்வுக் குழு இணையதளத்தை திறந்து, மனுதாரர் OCI பிரிவை கோருவதற்கான உரிய ஆவணங்களை பதிவேற்ற அனுமதிக்க வேண்டும். மாணவர் ஆவணங்களை பதிவேற்றிய பின்னர், அவற்றை NRI ஆய்வுக்குழு பரிசீலிக்க வேண்டும்.

எனவே, ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான இணையதள வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். MCC இணையதளத்தில் OCI அட்டையை பதிவேற்றுவதற்கான வசதி இல்லை. எனவே, ‘Foreign National’ பிரிவை ‘OCI’ என மாற்றி, உரிய ஆவணங்களை பதிவேற்றும் வகையில் இணையதளத்தை மீண்டும் திறக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Hindusthan Samachar / ANANDHAN