NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பிரஜித் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன்னிடம் செல்லுபடியாகும் OCI அட்டை இருப்பதாகவும், NEET-UG 2026 தேர்வில் தகுதி பெற்றுள்ளதால் அகில இந்திய இளநிலை மருத்துவப் படிப்
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பிரஜித் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன்னிடம் செல்லுபடியாகும் OCI அட்டை இருப்பதாகவும், NEET-UG 2026 தேர்வில் தகுதி பெற்றுள்ளதால் அகில இந்திய இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், மருத்துவக் கலந்தாய்வுக்கான ஆன்லைன் பதிவின்போது கவனக்குறைவாக ‘Foreign National (Other than OCI)’ என்ற பிரிவைத் தேர்வு செய்துவிட்டதாகவும், அதற்கு பதிலாக ‘OCI’ பிரிவைத் தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தனது தவறை பின்னர் சரிசெய்ய முயன்றபோது, மருத்துவக் கலந்தாய்வுக் குழுவின் இணையதளத்தில் OCI அட்டையைப் பதிவேற்றுவதற்கான வசதி இல்லை என்றும், எனவே ‘Foreign National’ பிரிவை ‘OCI’ என மாற்றி, உரிய ஆவணங்களைப் பதிவேற்றுவதற்காக இணையதளத்தை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு மற்றும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்கள் பதிவு செய்யும்போது தங்களது விவரங்களை அவர்களே பதிவு செய்வதால், மருத்துவக் கலந்தாய்வுக் குழு தன்னிச்சையாக ஒரு மாணவரின் பிரிவை மாற்ற முடியாது எனத் தெரிவித்தார்.

எனினும், நீதிமன்றம் அனுமதித்தால் மாணவரின் பிரிவை மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்றும், OCI பிரிவை கோரும் மாணவர், MCC இணையதளத்தில் உரிய ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆவணங்களை NRI ஆய்வுக்குழு பரிசீலித்த பின்னரே அடுத்தகட்ட கலந்தாய்வு நடவடிக்கைகளில் மாணவர் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “இது ஒரு மாணவரின் கல்வி எதிர்காலம் தொடர்பான விவகாரம்” என்பதை கருத்தில் கொண்டு, மனுதாரருக்கு உரிய வாய்ப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி, மருத்துவக் கலந்தாய்வுக் குழுவின் இணையதளத்தை மீண்டும் திறந்து, மனுதாரர் OCI பிரிவை கோருவதற்கான உரிய ஆவணங்களைப் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், ஆவணங்கள் பதிவேற்றப்பட்ட பின்னர் அவற்றை NRI ஆய்வுக்குழு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், அடுத்தகட்ட கலந்தாய்வு நடவடிக்கைகளில் பங்கேற்க தேவையான இணையதள வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam