Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச)
பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் ரேடியல் சாலைகளை நவீன வசதிகளுடன் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மத்திய கைலாஷ் முதல் கேளம்பாக்கம் வரையிலான 25 கி.மீ. OMR சாலை மற்றும் பல்லாவரம் பாலம் முதல் துரைப்பாக்கம் சந்திப்பு வரையிலான 7.4 கி.மீ. ரேடியல் சாலை ஆகியவற்றை சீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
டெண்டரில் தேர்வு செய்யப்படும் நிறுவனம், இந்த இரு முக்கிய சாலைகளையும் ஆய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும். இந்த DPR-ஐ 4 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் சர்வீஸ் சாலைகள், மேம்படுத்தப்பட்ட பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள், பாதுகாப்பான சாலை சந்திப்புகள், பேருந்து நிறுத்தங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் நடைபாதை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான பரிந்துரைகள் இடம்பெற உள்ளன.
மேலும், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான தனிப்பாதைகள், மேம்படுத்தப்பட்ட தெருவிளக்குகள், மழைநீர் வடிகால் வசதிகள், பிரத்யேக பேருந்து பாதைகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையிலான இணைப்பு வசதிகள் ஆகியவை குறித்தும் DPR-ல் இடம்பெற உள்ளது.
OMR மற்றும் ரேடியல் சாலைகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, வாகனப் போக்குவரத்தை மேம்படுத்துவதுடன், பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சாலை மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ