Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் தனியார் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ததாக, ஏற்கனவே பழனி 100 கோடி நில விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற மணி, நிலத்தை வாங்கிய கந்தசாமி ஆகிய 3 பேர் மீது பழனி சார்பதிவாளர் ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் நிலங்களை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரம் தொடர் பூதாகரமாக வெடித்து வருகிறது.
இந்நிலையில், பழனி அருகே ஆயக்குடி பகுதியில் உள்ள தனியார் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ததாகப் புதிய முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பழனியில் 100 கோடி மதிப்பிலான நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்த விவகாரத்தில் ஏற்கனவே பணி இடைநீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ள பழனி முன்னாள் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இந்த ஆயக்குடி நிலத்தையும் முறைகேடாகப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இந்தச் சட்டவிரோதப் பத்திரப்பதிவு குறித்துப் பழனி தற்போதைய சார்பதிவாளர் ஈஸ்வரி அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில், முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து கொடுத்த சஸ்பெண்ட் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்ற மணி, மற்றும் அந்த நிலத்தை வாங்கிய கந்தசாமி ஆகிய 3 பேர் மீது ஆயக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே சிபிசிஐடி விசாரணை வளையத்தில் உள்ள சஸ்பெண்ட் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது மீண்டும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2 தினங்களுக்கு முன்பு இது கோவில் நிலம் என பரவிய நிலையில், தற்போது தனியார் நிலம் என உறுதி செய்து பத்திரப்பதிவுத்துறை சார்பில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN