பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய 3 பேர் கைது
திருவள்ளூர், 12 ஆகஸ்ட் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய ரூ.15,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் சார் பதிவாளர் உள்பட மூன்று பேரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்
Ponneri Registrar Office


திருவள்ளூர், 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய ரூ.15,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் சார் பதிவாளர் உள்பட மூன்று பேரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.

பத்திரப் பதிவு செய்வதற்காக வந்த நடராஜ் என்பவரிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயகுமார் தலைமையில் ஆய்வாளர்கள் தமிழரசி, மாலா உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட குழுவினர் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ரசாயனம் தடவப்பட்ட ரூ.15,000 நோட்டுகளை லஞ்சமாக பெற்றபோது, சார் பதிவாளர் சங்கர், பத்திரப் பதிவு எழுத்தர் ரமேஷ் மற்றும் உதவி பத்திரப் பதிவு எழுத்தர் நித்யா ஆகியோர் கையும் களவுமாக சிக்கினர். இதையடுத்து மூவரையும் அதிகாரிகள் கைது செய்து, லஞ்சமாக பெறப்பட்ட ரூ.15,000 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN