Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை வாசித்தபோது தமிழைத் தெளிவாக உச்சரிக்கவும், எண்களைச் சரியாகக் குறிப்பிடவும் அமைச்சர் மரியவில்சன் தடுமாறியதாகவும், அதனை சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் சுட்டிக்காட்டியபோது அமைச்சர் ஆணவத்துடன் பதிலளித்ததாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தன்னிடம் உள்ள பிழையை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்திக்கொள்ள முனைவதே அரசியல் முதிர்ச்சி. ஆனால், அந்தப் பண்பு இல்லாமல் தன்னை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள முடியாது என அமைச்சர் மரியவில்சன் அதிகாரத்திமிருடன் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
தமிழ்ச்சான்றோர்கள் பலர் செந்தமிழில் சொற்போர் நடத்திய சட்டப்பேரவையில், அமைச்சர் ஒருவர் பார்த்து வாசிக்கும்போதுகூட தமிழைத் தெளிவாக உச்சரிக்கத் தடுமாறுவது அந்த அவைக்கு இழுக்கு என சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் பிறப்பால் கிறித்தவன்; அதுவே எனக்கு அன்பைப் போதித்தது. எவ்வளவு தமிழ் படித்தாலும் அன்பைப் போதிக்காது” என்ற வகையில் அமைச்சர் பேசியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் விமர்சித்துள்ளார்.
கிறித்தவம் அன்பைப் போதிக்கிறது என்று கூறுவது அமைச்சரின் உரிமை என்றும், அதனை மதிப்பதாகவும் தெரிவித்துள்ள சீமான், அதே நேரத்தில் தமிழ் அன்பைப் போதிக்காது எனக் கூறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை என தெரிவித்துள்ளார்.
“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்”, “அன்பிலார் எல்லாம் தமக்குரியர்” போன்ற திருக்குறள் வரிகளையும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”, “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்”, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” போன்ற தமிழின் உயரிய கருத்துகளையும் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்மொழி உலகிற்கு அன்பு, மனிதநேயம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த ஜி.யு.போப் மற்றும் வீரமாமுனிவர் உள்ளிட்டோர் தமிழுக்குத் தொண்டாற்றிய வரலாற்றையும் சீமான் நினைவுகூர்ந்துள்ளார். அனைத்து சமயங்களும் அன்பையே போதிக்கின்றன என்றும், எனவே மதத்தை முன்னிறுத்தி தமிழை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒருவரின் அடையாளம் அவரது தாய்மொழி மற்றும் இனத்துடனும் தொடர்புடையது என்றும், மதம் என்பது ஒருவர் ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கை சார்ந்தது என்றும் குறிப்பிட்ட சீமான், தமிழைத் தவறாக உச்சரித்ததையும், அதனை நியாயப்படுத்தும் வகையில் தமிழை அவமதிக்கும் கருத்துகளைத் தெரிவித்ததையும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
“தமிழென்பது பேரன்பின் தாய்; அன்பின் உயிர்நிலை. எங்களின் உயிர்மொழியான தமிழ் அன்பைப் போதிக்காது என்று இழித்துரைப்பது தமிழையும் தமிழ்த்தேசிய இனத்தையும் அவமதிக்கும் செயலாகும்” எனத் தெரிவித்துள்ள சீமான், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் மரியவில்சன் தனது பேச்சுக்கு மனம்வருந்தி மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P